(Go: >> BACK << -|- >> HOME <<)

உள்ளடக்கத்துக்குச் செல்

ஆ. மாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. மாதவன்
பிறப்பு(1934-02-07)7 பெப்ரவரி 1934
திருவனந்தபுரம், கேரளா இந்தியா
இறப்பு5 சனவரி 2021(2021-01-05) (அகவை 86)
திருவனந்தபுரம், கேரளா
பணிஎழுத்தாளர்
பெற்றோர்ஆவுடைநாயகம் பிள்ளை
செல்லம்மாள்
வாழ்க்கைத்
துணை
சாந்தா
பிள்ளைகள்கலைச்செல்வி
மலர்ச்செல்வி
கோவிந்தராஜன்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது (2015)

ஆ. மாதவன் (A. Madhavan, 7 பெப்ரவரி 1934 – 5 சனவரி 2021) கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து வசித்த தமிழ் எழுத்தாளர் ஆவார். 1955 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவந்த முக்கிய படைப்பாளி ஆவார்.[1] இவரது பல சிறுகதைகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. திராவிட எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராக ஆனவர். கிருஷ்ண பருந்து உட்பட 3 புதினங்களை எழுதியுள்ளார். செல்வி இசுடோர்சு என்ற கடையை நடத்திவந்த மாதவன் திருவனந்தபுரத்திலுள்ள சாலைத்தெருவைப் பின்னணியாகக் கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.[2]

இவருக்கு 2015 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு நூலுக்காக வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆ. மாதவன் 1934இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவரது தந்தைபெயர் ஆவுடைநாயகம் பிள்ளை. தாயார் செல்லம்மாள். ஆ.மாதவனின் தந்தையின் ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை. தாயின் ஊர் நாகர்கோயில். பிளவுபடாத திருவிதாங்கூர் இருந்த காலத்திலேயே அவர்கள் திருவனந்தபுரத்துக்குக் குடியேறிவிட்டனர். அவரது தந்தை திருவனந்தபுரம் சாலை அங்காடியில் சிறுவணிகராக இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த ஆ. மாதவன் மேலே படிக்கவில்லை. திராவிட இயக்க ஆதரவாளராக எழுத ஆரம்பித்தார். அவரது முதல் கதை 1955இல் 'சிறுகதை' இதழில் வெளியாகியது. பின்னர் மலையாளம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று தீவிர இலக்கியத்தளத்தில் செயல்படலானார். அவரது முதல் சிறுகதைத் தொகுதி மோகபல்லவி. கடைத்தெருக்கதைகள் இவருக்குப் புகழைத் தேடித்தந்த தொகுதி.

ஆ. மாதவன் திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர் என்ற பாத்திரக் கடையை 75 வயது வரை நடத்திவந்தார். சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அவரது பெரும்பாலான கதைகள் அமைந்துள்ளன. அவர் விமர்சகர்களால் கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகிறார். தமிழிலக்கியத்தில் ஒரு கடைத்தெரு இலக்கியப்பதிவு பெறுவது ஆ. மாதவன் கதைகள் வழியாகவே.

1974இல் ஆ. மாதவனின் முதல் நாவலான ’புனலும் மணலும்’ வெளிவந்தது. கரமனையாற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை அது. அந்நாவல் அதன் யதார்த்தத்துக்காகப் பெரிதும் கவனிக்கப்பட்டது. 1982இல் வெளிவந்த கிருஷ்ணப்பருந்து தான் ஆ. மாதவனின் மிகச்சிறந்த நாவல் என்று விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. 1990இல் அவரது மூன்றாம் நாவலான ’தூவானம்’ வெளிவந்தது.

மாதவன் மொழிபெயர்ப்பாளரும்கூட. 1974இல் அவர் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் எனும் குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002இல் சாகித்ய அக்காதமி வெளியீடாக மலையாள எழுத்தாளர் பி கெ பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்ஙட்டே என்ற நாவலை இனி நான் உறங்கட்டும் என்ற பேரில் மொழியாக்கம் செய்தார். மாதவனின் மனைவி பெயர் சாந்தா. இவர்களுக்கு 1966இல் மணமானது; கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்களும் கோவிந்தராஜன் என்ற மகனும் உள்ளனர். 2002இல் மனைவியும் 2004இல் மகனும் காலமானார்கள். மாதவன் மகளுடன் வசித்துவந்தார்.

விருதுகள், நூல்கள்[தொகு]

  • கடைத்தெருவின் கலைஞன் [ஜெயமோகன் எழுதிய நூல்]
  • விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வழங்கும் விஷ்ணுபுரம் விருது (2010 ஆம் ஆண்டு)
  • தமிழக அரசின் இயல் துறைக்கான 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருது
  • 2016 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது

ஆக்கங்கள்[தொகு]

சிறுகதைத் தொகுப்பு[தொகு]

  • மோகபல்லவி 1974
  • கடைத்தெருக்கதைகள் 1974
  • காமினிமூலம் 1975
  • மாதவன் கதைகள் 1984
  • ஆனைச்சந்தம் 1990
  • அரேபியக்குதிரை 1995
  • ஆ.மாதவன் கதைகள், முழுத்தொகுப்பு 2002, தமிழினி பதிப்பகம்

புதினங்கள்[தொகு]

கட்டுரைத்தொகுப்பு[தொகு]

  • இலக்கியச்சுவடுகள் 2013 (2015ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது)

மொழியாக்கம்[தொகு]

  • யட்சி [மூலம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன், யக்‌ஷி]
  • இனி நான் உறங்கட்டும் [மூலம் இனி ஞான் உறங்ஙட்டே, பி.கெ.பாலகிருஷ்ணன்]

மறைவு[தொகு]

ஆ. மாதவன் 2021 சனவரி 5 அன்று தனது 87-வது அகவையில் திருவனந்தபுரத்தில் காலமானார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆ.மாதவன்: எளியவர்களின் கதைக்காரர்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/620885-a-madhavan.html. பார்த்த நாள்: 24 June 2024. 
  2. "கடைத்தெருக் கதைகளைச் சொன்ன ஆ.மாதவன்! - கதை சொல்லிகளின் கதை". ஆனந்த விகடன். https://www.vikatan.com/literature/arts/127488-life-history-of-tamil-writer-amadhavan. பார்த்த நாள்: 24 June 2024. 
  3. "Contemporary Fiction – A Madhavan – Kalachuvadu Publications | A Leader and a Trendsetter in Tamil Publishing" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  4. Kolappan, B. (2021-01-06). "Sahitya Akademi winner A. Madhavan passes away" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/sahitya-akademi-winner-a-madhavan-passes-away/article33505624.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._மாதவன்&oldid=4021565" இலிருந்து மீள்விக்கப்பட்டது